மத்தியபிரதேச மாநிலத்தில், கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் மீது அடுத்தடுத்து மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 14 பேருடன் சிமெண்ட் லாரி ஒன்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேரணியின் கலந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தது. ரேவா-சத்னா எல்லையோத்தில் மொஹானியா சுரங்கப்பாதைக்கு அருகே இரவு 9 மணியளவில் மகாகும்பத்தில் கலந்து கொண்டு திரும்பிய பயணிகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக 3 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்துகொண்டிருந்த சிமெண்ட் லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே விபத்தில் காயமடைந்தர்களை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர்களுக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால் மேற்சிகிச்சைக்காக வெளியே விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள் என தெரிவித்தார். இதேபோல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.