மொழிக்கு பெரும்பங்களித்த எழுத்தாளர்களை நாம் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

மொழிக்கு பெரும்பங்களித்த எழுத்தாளர்களை நாம் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம், புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா, இன்று புதுக்கோட்டை மாவட்டமைய நூலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டமைய நூலக முதல் நிலை நூலகர் கி.சசிகலா முன்னிலை வகித்தார்.

விழாவில் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்;-

“புதுக்கோட்டை பல்வேறு சிறப்புகளைப் பெற்றது. பல எழுத்தாளர்களையும். கவிஞர்களையும் உருவாக்கிய பெருமை புதுக்கோட்டைக்கு உண்டு. கவிஞர் கண்ணதாசன் முக்கியமானவர். அதேபோல தமிழகத்தின் முன்னனி பதிப்பகங்களை நடத்தியவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். புதுக்கோட்டையிலேயே 10க்கு மேற்பட்ட பதிப்பகங்கள் இருந்திக்கிறது வெ.சாமிநாத சர்மாவின் புத்தகங்களை மட்டும் பிரசுரிக்கவே பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் தொடங்கப்பட்டது. அதைத் தொடங்கி நடத்திய முறையூர் சொக்கலிங்கம் பெருமளவில் பாரட்டப்படவில்லை. அதே போல வருத்தமானது என்னவென்றால்….37 நாடகங்களை எழுதிய சேக்ஸ்பியரின் நினைவு நாளைத்தான் நாம் உலக புத்தக தினமாகக் கொண்டாடுகிறோம். அவரின் நினைவிடத்தை பார்க்க ஆண்டிற்கு 30 லட்சம் பேர் வருகிறார்கள். ஆனால் தமிழ் தாத்தா உ.வே.சா.வின் இல்லத்திற்கு எவ்வளவு பேர் போகிறார்கள். சமீபத்தில் மறைந்த ஜெயகாந்தனைக்கூட அவ்வளவாக நாம் கண்டுகொள்ளவில்லை.

ஆங்கிலேயரின் மொழிப்பற்றும், நாட்டுப்பற்றுமே இங்கிலாந்து உலகமெலாம் ஆளக் காரணம். முதலில் மொழிக்கு பெரும்பங்களித்த எழுத்தாளர்களை நாம் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்க புரட்சி, பிரெஞ்சுப்புரட்சிக்கு முக்கிய தூண்டுகோளே ரூஸோவின் “சமுதாய ஒப்பந்தம் ” நூல்தான். அமெரிக்காவில் அடிமைமுறை நீங்கக்காரணமே” “அங்கிள் டாம்ஸ் கேபின்” என்ற நூல்தான். நூல்கள் என்ன செய்யும் என்று கேட்க வேண்டாம். புத்தகம் அனைவரையும் மாற்றும் ஆற்றல் வாய்ந்தது.அம்பேத்காரைப் பற்றிப் பேசுவதைவிட அவரின் வாசிக்கும் பழக்கத்தை இளையோரிடம் கொண்டு சேர்ப்பது நல்லது. புத்தகம் படிக்கும் பழக்கம் எல்லோருக்கும் வேண்டும்” என்றார்

இந்நிகழ்வில், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற வீ. கஸ்தூரிநாதன் குடும்பத்தார், சிறந்த நூலுக்கு தமிழக அரசின் விருது பெற்ற முனைவர் சேதுராமன், பொன்னியின் செல்வன்நூலை வாசித்த லாரா பிரபஞ்சனி, வாசக தம்பதியர் சம்பத்குமார், விஜயலட்சுமி ஆகியோர் பாராட்டு பெற்றனர். முன்னதாக, வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன் பாராட்டு பெற்றவர்களை அறிமுகப்படுத்தினார். புதுகைப் புதல்வன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக கவிஞர் பீர்முகமது நன்றியுரை யாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 7 = 11