மேகதாது விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது – கமல்ஹாசன்

மேகதாது விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்தார். அதன்பின் நேற்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் “கிராம சபைக்” கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் கூறியதாவது, நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் தெரிவிக்கவே கோவை வந்துள்ளேன் எனக்கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த கொரோனா காலத்தில் மக்களை எண்ணித்தான் கோவையில் மக்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. அதனால் தான் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் பார்த்தே ஆளுங்கட்சி செயல்பட்டு வருகிறது.

கொங்குநாடு அரசியல் கோஷம் மட்டுமே, மக்கள் தேவை இல்லை. கோவை மக்களுக்கு திட்டங்களில் பிரிவினை பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கு மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஈஸ்ட் இண்டியன் கம்பெனி போல, வடக்கில் வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது. மேகதாது விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.