மேகதாது அணை விவகாரம் : பாஜகவின் உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் – பாஜக மாநில துணைத் தலைவர்

மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து பாஜக நடத்தும் உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என பாஜக மாநில  துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் முயற்சியை கைவிடக் கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் 5ம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் தஞ்சையில் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்ட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நீர் வந்தே தீர வேண்டும். யாருக்கும் அதை தடுக்கும் உரிமை கிடையாது என்று தெரிவித்தார்

இந்த பேட்டியின் போது மாவட்ட தலைவர் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய் சதிஷ், ஊடக பிரிவு செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.