மேகதாது அணை தொடர்பாக, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரை சந்திக்க கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று (ஆக.,25) டில்லி செல்கிறார்.
கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கிறது. அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சில நாட்களுக்கு முன் டில்லி சென்ற முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்.
இப்போது மீண்டும் இன்று அவர் டில்லி சென்று மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசுகிறார். மேலும் மாநில அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாகவும், பா.ஜ., மேலிட தலைவர்களை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் பொம்மை கூறும் போது, ”மாநிலத்தின் நிலம், மொழி, நீர் விஷயங்களில் எந்தவித சமரசமும் கிடையாது. மாநில நலன் காக்கப்படும். யாரும் ஆதங்கப்பட தேவையில்லை. ஜல் சக்தி, விவசாயம், ராணுவ அமைச்சர்களை சந்தித்து, கர்நாடக திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்படும்,” என்றார்.