மெரினாவில் நீர்காப்பு பிரிவு உருவாக்கப்படும்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!!

மெரினாவில் கடல் அலையில் சிக்கி பொதுமக்கள் உயிரிழப்பதை தடுக்க நீர்காப்பு பிரிவு என்ற புதிய பிரிவு தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றோடு சட்டப்பேரவை நிறைவு பெறுகிறது. இந்நிலையில் காவல்துறை மானிய கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

அதில் அவர் கூறியாதவது.,சவாலான மற்றும் முக்கிய இணையவழி குற்றங்களை புலனாய்வு செய்யவும் காவல் ஆளிநர்களுக்கு சைபர் குற்றங்களை புலனாய்வு செய்ய தகுந்த பயிற்சி அளிக்கவும் மாநில இணையதளக் குற்றப் புலனாய்வு மையம் அமைக்கப்படும்.

மெரினாவில் கடல் அலையில் சிக்கி பொதுமக்கள் உயிரிழப்பதை தடுக்க நீர்காப்பு பிரிவு என்ற புதிய பிரிவு தொடங்கப்படும். கடலோர காவல் படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும் இப்பிரிவில் கடலோர குழுமம் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் 12 மீனவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

ரூ. 8.42 கோடி செலவில் சென்னை தெற்கு மற்றும் வடக்குப் பிரிவுகளில் தலா ஒரு தீவிர குற்றவாளிகள் தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும். ரூ. 38.25 லட்சம் செலவில் 51 சிறார் மன்றங்கள் உருவாக்கப்படும்.

காவல் துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு சென்னையில் உள்ள `100 பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். கண்காணிப்பு பணிக்காக ரூ.3 கோடி 60 லட்சம் செலவில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்தப்படும்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

பொதுமக்களோடு தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்த 1,20,000  காவல் ஆளிநர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும்.

மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படையில் ஒப்பந்த அடிப்படையில் சேரும் விதமாக அவர்களுக்கு கடலோர காவல் படைக் குழுமம் மூலம் ரூ. 90 லட்சம் செலவில் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும். கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணி புரிய 1000 மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையினராக பணியமர்த்தப்படுவர்.

காவலர் பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும் காவல் துறை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர்களுக்குத் தேவையான திட்டங்களையும் புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும்.

சென்னை மாநகரில் மண்டல அளவில் நான்கு சைபர் குற்றக் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை இணையதள காணொளி மூலம் சந்தித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

மக்களின் பிரச்சனைகளை காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க ஒரு கைபேசி செயலி உருவாக்கப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்திய குடிமக்களின் குறைகளைக் களைய காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தனிப்பிரிவு அமைக்கப்படும்.சுற்றுலா தளங்களில் மக்களுக்கு பாதுகாப்பும் வழிகாட்டுதலும் வழங்க சுற்றுலா காவல் துறை அமைக்கப்படும்.

இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன், நியூட்ரினோ மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டு வழி சாலை திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள், பத்திரிகையாளர்கள் மீது முந்தைய அரசால் 5,570 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை திரும்பப் பெற அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதே போல் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்ப்படி 800ல் இருந்து 1000 ஆக உயர்த்தி வழங்கப்படும். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 275 கோடியில் 896 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம்.