தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார். அப்போது பள்ளிகள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். ஆனாலும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், உயிரியல் பூங்காக்கள்,சுற்றுலா தலங்கள், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு தடை, நீச்சல்குளங்கள், மதுபான பார்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட சிலவற்றை திறக்க தமிழக அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து, வழிபாட்டு தலங்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க கடந்த இரண்டு வாரங்கள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளே தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி, மக்கள் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதில் சில இடங்கள் மூடப்பட்டுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்ததுடன், தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 1,700 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து வருகிற 23ம் தேதி முதல் தமிழகத்தில், கூடுதல் தளர்வுகளை அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆகஸ்டு மாதம் 23ம் தேதியில் இருந்து தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளாக என்னென்ன அறிவிக்கலாம் என்பது குறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். குறிப்பாக தமிழகத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ள பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதிக்கலாமா? மீண்டும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கலாமா? நீண்டநாட்களாக திறக்கப்படாமல் உள்ள பள்ளிகளை எந்த தேதியில் இருந்து திறக்கலாம் என்பது குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.