
”சுதந்திர தின உரையின் போது, நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்வர் உத்தவ் தாக்கரேவை, நான் அங்கிருந்திருந்தால் அறைந்திருப்பேன்,” எனக்கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் ‘மக்கள் ஆசி யாத்திரை’ நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசுகையில், ‛எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தெரியாதது அவமானமாக உள்ளது. சுதந்திர தின உரையில், எத்தனையாவது ஆண்டை கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள உரையின் பாதியில், தனது உதவியாளரிடம் அதனை கேட்டு தெரிந்து கொண்டார். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், அவரை கடுமையாக அறைந்திருப்பேன்,’ என்றார்.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு சிவசேனா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இரு கட்சி தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் உருவானது. பா.ஜ., அலுவலகம் மீதும் தாக்கப்பட்டது. இது தொடர்பாக நாராயன் ரானே மீது போலீசார், ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு நாராயன் ரானே மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நாராயண் ரானேவை விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையின் முடிவில் அவரை கைது செய்தனர்.