‘முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்’ தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் – அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைய தலைமுறை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் ‘முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்’ தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.

அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்டார். அதன்படி, ஒலிம்பிக் அகாடமிகள் மாநிலத்தின் நான்கு மண்டலங்களில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இங்கு உயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தமிழர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டினை அரசு வேலை வாய்ப்புகளில் 3 விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள விளையாட்டுகளில் ஒன்றாக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திட்டங்கள் மற்றும் விளையாட்டு தொடர்புடைய செயல்பாடுகள் குறித்த விவரங்களை விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் அழைப்பு சேவை மையம் தொடங்கப்படும்.

விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள கட்டமைப்பு வசதிகளை “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் தரம் உயர்த்திட / புதிதாக உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் நடவடிக்கை ரூ.20 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சுற்றுச்சூழல் துறை சிறந்த வகையில் செயல்படும் விதமாக உரிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பசுமைக் கட்டிடம் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைய தலைமுறை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், இயற்கையைப் பாதுகாக்கும் விதமாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கத்துடன் புதிய பசுமைத் திட்டங்களைக் கண்டறிவதற்கும், எளிய தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கவும், ‘முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம்’ தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

2021-2022ம் ஆண்டில், தமிழகத்தில் ஒரு கடற்கரைக்கு 10 கோடி ரூபாய் வீதம், இரு கடற்கரைகளுக்கு 20 கோடி ரூபாய் செலவில் தமிழக சுற்றுச்சூழல் துறை மூலம் கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும்.

தொழிற்சாலைகளை இயக்குவதற்கான இசைவாணை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதற்கு பதிலாகத் தகுதியான தொழிற்சாலைகளுக்கு கால அளவினை நீட்டித்துத் தொகுப்பாக வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முனைப்புடனும் மற்றும் முன்மாதிரியாகவும் செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ‘பசுமை முதன்மையாளர் விருது’ ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தலா ஒரு லட்சம் என 100 ஆர்வலர்களுக்கு வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை 32 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கல். தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பொதுமக்களைக் கொண்டு பிரச்சாரம். ஆயிரம் விளக்கு பகுதியில் பசுமை பூங்கா  அமைத்து, சாலை வசதியை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் மரம் நடுவதற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு செட்டி குளத்தின் கரையை ரூபாய் 7 கோடி செலவில் மேம்படுத்தி பூங்கா அமைத்தல், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஊரணியை 5 கோடி ரூபாய் செலவில் புனரமைத்து மேம்படுத்துதல், புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகராட்சி புதுக்குளம் ஏரியை 5 கோடி ரூபாய் செலவில் புனரமைத்து மேம்படுத்துதல் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.