மீனவர்களின் கருத்துக்கு பிறகே மீன்வள மசோதா 2021 நிறைவேற்றப்படும் ; மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் பேட்டி

மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே மீன்வள மசோதா 2021 நிறைவேற்றப்படும் என மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே மீன்வள மசோதா 2021 நிறைவேற்றப்படும். மசோதாவின் சரத்துகளை மக்களிடம் எடுத்துரைப்போம். மீன்வள மசோதாவை பற்றி பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன.

பாரம்பரிய மீனவர்களுக்கான பின்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளின் கட்டுமான நிறுவனத்தை தமிழகத்தில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதனை தொடர்ந்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனை கெளரவப்படுத்தும் வகையில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். தேசிய தலைநகரில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.