மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, பறையத்தூர் கிராமத்தில் கடந்த 14ம் தேதி அன்று மின்னல் தாக்கி உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களிடம், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் மதிப்பிலான காசோலைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று வழங்கி ஆறுதல் கூறினார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய குழந்தைகள்      16 வயது மாணவன் தென்னரசு, 15 வயது மாணவி காளீஸ்வரி, பழனிச்சாமி சசோதரர் 38 வயது இளையராஜா ஆகியோர் கடந்த 14ம் தேதி மாலை பள்ளியிலிருந்து பறையத்தூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை அறிந்த முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக அரசின் நிவாரண உதவிகளை வழங்க அறிவுறுத்தினார். அதன்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில், இறப்புச்சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகள் 24 மணிநேரத்திலேயே வழங்கப்பட்டது.

மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களிடம் காசோலைகள் வழங்கி ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 3