
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில் அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள், பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பிக்க செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.