மாற்றுத் திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்த தாய்- மனு அளித்த 24 மணி நேரத்துக்குள் வீடு ஒதுக்கிய கோவை ஆட்சியர்  

மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்த பெண்ணுக்கு, வீடு கேட்டு மனு அளித்த 24 மணி நேரத்துக்குள் வீடு ஒதுக்கி, அதற்கான ஆணையை கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவை செட்டிபாளையத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ஷீலா (44). இவரது கணவர் கோபால் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு ராமசாமி (14) என்ற மகன் உள்ளார். மாற்றுத் திறனாளியான இவர் தாயார் உதவியுடன் வாழ்ந்து வருகிறார். கணவர் மறைவுக்கு பிறகு ஷீலா தங்க இடம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார். அப்போது பெரியார் நினைவு சமத்துவபுரத்தைச் சேர்ந்த மணியம்மாள் (63) என்ற மூதாட்டி ஆதரவின்றி தவித்த ஷீலாவுக்கும், அவரது மகனுக்கும் மனிதநேயத்துடன் தன் வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்தார்.

மகனை கவனிக்க வேண்டியிருந்ததால் ஷீலாவால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அரசு தரும் மாற்றுத் திறனாளி நல உதவித் தொகையை ஷீலா பயன்படுத்தி வந்தார். தவிர, மணியம்மாள் தனியார் ஹோட்டலில் மாதம் ரூ.6,500 ஊதியத்துக்கு பாத்திரம் கழுவும் வேலைக்குச் சென்று ஷீலாவையும், அவரது மகனுக்கும் உதவி வந்தார். பின்னர் வயது மூப்பின் காரணமாக கடந்த நவம்பரில் இருந்து மணியம்மாள் வேலைக்கு செல்லவில்லை. 4 ஆடுகள் வாங்கி அதை மேய்ச்சலுக்கு விட்டு, பராமரித்து அதில் கிடைக்கும் தொகையை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இதற்கிடையே, தனது காலத்துக்கு பிறகு மேற்கண்ட இருவருக்கும் உரிய வசிப்பிடம் இருக்காது என்பதை உணர்ந்த மணியம்மாள், ஷீலா மற்றும் அவரது மகனை அழைத்துக்கொண்டு திங்கள்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்களுக்கு வீடு ஒதுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலித்த ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், அது தொடர்பாக விசாரித்தார். மனுவில் உண்ணை இருப்பதை அறிந்த ஆட்சியர், மாற்றுத் திறனாளி மகனுடன் தவிக்கும் ஷீலாவுக்கு மலுமிச்சம்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பில் வீடு ஒன்றை ஒதுக்கி உத்தரவிட்டார்.

பின்னர், வீடு ஒதுக்கப்பட்டதற்கான உத்தரவு ஆவணத்தை, ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், செட்டிபாளையத்தில் ஷீலா தங்கியுள்ள இடத்துக்கே இன்று நேரடியாகச் சென்று அவரிடம் வழங்கினார். மேலும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் மூதாட்டி மணியம்மாளையும் பாராட்டினார். மனு அளித்த 24 மணி நேரத்துக்குள் மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்த பெண்ணுக்கு வீடு ஒதுக்கிய ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

81 − = 76