பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலின் பெரிது என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விட பெரிது என்பது வள்ளுவர் வாக்கு,
தமிழ்நாடு முதலமைச்சர் ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மன வருத்தம் அடையக் கூடாது ஒரே ஒருவருக்கு என்றாலும் நன்மை பயக்கும் என்று சொன்னால் அந்த செயலை நான் உடனடியாக செய்தாக வேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு மாற்றுத் திறனாளி களுக்கு நன்மை செய்யும் வகையில் பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகள் நலனை பேணிக்காத்திட முத்தமிழ் அறிஞர் கலைஞர் இந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளின் நல் வாழ்விற்காக தனி துறையை உருவாக்கி அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மாற்றுத் திறனாளிகள் என்ற சொல்லையும் அறிமுகப் படுத்தினார்.

ஊனமுற்றோர் என்று சொல்லக்கூடாது அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரைக் கொடுத்து புதிய நம்பிக்கையை உருவாக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். மாற்றுத்திறனாளி களுக்கு என தனி துறையை உருவாக்கினார் உருவாக்கியது மட்டுமல்ல, அந்தத் துறையை தன் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டார். இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் அவர்களால் தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருதினை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் சுலோசனா கார்டன்ஸ்நிறுவனத்திற்கு தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கி முதலமைச்சர் கௌரவித்திருக்கிறார். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 புதிய மாவட்டங்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவுக்கான வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நடமாடும் சிகிச்சை பிரிவிற்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் பார்வையிட்டு

இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் தசை பயிற்சி அளித்தல், செயல்திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு, விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் மற்றும் இத்துறையின் வாயிலாக மறு வாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்காக அனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை உணர்ந்து மாற்றுத்திறனாளிகளின் குறைகள் நீங்கி ஊக்கத்துடன் திறனாளிகளாக, உயரும் வகையில், வழங்கி இருக்கும் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் நிச்சயமாக மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தொகுப்பு : இரா.இளவரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
ராமசுப்பிரமணியன், உதவி மக்கள் தொடர்புஅலுவலர்