மார்த்தாண்டபுரம் 1ம் வீதிக்கு சீனு சின்னப்பாவின் பெயரை சூட்ட புதுகை நகர்மன்ற தலைவரிடம் 40 அமைப்புகள் கோரிக்கை

புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் 1ம் வீதிக்கு அரமனச்செம்மல் சீனு சின்னப்பாவின் பெயரை சூட்ட கோரிக்கை எழுந்துள்ளது.

புதுக்கோட்டையில் புகழ்வாய்ந்த நிறுவனமாக பார்க்கப்படும் பேக்கரி உலகின் அரசன் என்று அனைவராலும் அழைக்கப்படும் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் நிறுவனர் பெரியவர் சீனு சின்னப்பா கடந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி தன்னுடைய 69 ஆவது வயதில் காலமானார். அவர் வாழ்ந்த காலத்தில் யாரையும் எந்த சூழலிலும் பகைத்துக் கொள்ளாமல் தன்னுடைய நண்பர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் வாழ்வில் வெற்றி பெற வழிகாட்டியாக இருந்தவர்.

தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை சமூகத்தின் மேம்பாட்டிற்காக எந்த சமரசம் செய்து கொள்ளாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாரி வாரி வழங்கியவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் அங்கத்தினராக இருந்த பொழுது ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட காரணமாக இருந்துள்ளார். ஒவ்வொரு பேரிடர் காலங்களிலும் அரசாங்கத்தின் கோரிக்கையை உடனடியாக ஏற்று பலமுறை பல லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கி புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பிள்ளையார் சுழி போட்டவரும் சீனு சின்னப்பாவே என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.

அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா வீதி என பெயர் சூட்ட கோரி புதுக்கோட்டையைச்சேர்ந்த 40 சமூக,இலக்கிய, ரோட்டரி, பத்திரிக்கையாளர்கள், ஆன்மீக  அமைப்புகள் சார்பாக, புதுக்கோட்டை, மார்த்தாண்டபுரம் 1-ம் வீதிக்கு, அறமனச்செம்மல்/வள்ளல் சீனு.சின்னப்பா வீதி என்று பெயர் சூட்டுமாறு வலியுறுத்தி அதற்கான முனுவை புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் திலகவதி செந்திலிடம் உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் சண்முக பழனியப்பன், ரோட்டரி உயிரொளித்திட்டத்தின் தலைவர் டாக்டர் ச.இராம்தாஸ், கம்பன் கழகச் செயலாளர் இரா.சம்பத்குமார், இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் சத்தியராம் இராமுக்கண்ணு, அம்பிகா கல்வி அறகட்டளைத் தலைவர் சந்திரா ரவீந்திரன், மாவட்ட ரெட்கிராஸ் பொருளாளர் எஸ்.மத்தியாஸ்,வாசகர் பேரவைச் செயலாளர் சா.விஸ்வநாதன் மற்றும்  புதுகை ஒன் மார்கழி மகா உற்சவத்தலைவர் ந.புண்ணியமூர்த்தி ஆகியோர் வழங்கினர். உடன்பிற அமைப்புகளின் நிர்வாகிகள் கவிஞர் நிலவை பழனியப்பன், டாக்டர் சலீம்,சுதந்திரராஜன்,பக்கிரிசாமி, ராஜ்குமார், முரளீதரன்,வீரமுத்து,முரளி, கணேசன்,கருணாகரன், கவிஞர் கண்ணதாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 87 = 95