
நாளை திரையரங்குகளில் வெளியாகும் மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியடைய வேண்டி திருப்பதி ஏழுமலையானிடம் சரணடைந்தேன் என நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.
நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும் டைம் மெஷின் மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், விஷால் – எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது. அதற்கான தனித்தனி தோற்றங்களும் அவர்களுக்கு உள்ளன.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து நாளை திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இன்று திருப்பதி கோவிலில் விஷால் ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட விஷாலுக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.
தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய விஷால், நாளை மார்க் ஆண்டனி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து படத்தை தயார் செய்து இருக்கிறோம். இறுதியாக திரைப்படத்தின் வெற்றிக்காக இன்று ஏழுமலையானிடம் சரணடைந்திருக்கிறேன் என்று கூறினார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட தேவையான பணத்தை வங்கிகள் விரைவில் வழங்க உள்ளன. கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பணத்தை நிகழ்ச்சி நடத்தி திரட்டும் எண்ணம் தற்போது இல்லை என்றார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு இருப்பது பற்றி கேட்டபோது, அது பற்றி கேள்விப்பட்டேன். நான் ஊர் ஊராக சுற்றி கொண்டிருக்கிறேன். எனவே எனக்கு முழுமையான விவரங்கள் தெரியாது. கைது சரியா , தவறா என்பதை போலீசாரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி சென்றார் விஷால்.