“எந்த அளவுக்கு மழை வந்தாலும், காற்று வீசினாலும் அவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது மாண்டஸ் புயல். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஏற்கெனவே சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவர்கள், தலைமைச் செயலாளரோடு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கண்காணிப்பு அலுவலர் ஐஏஎஸ் அதிகாரிகள் அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை கவனித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளனர்.

எனவே, எந்தளவுக்கு மழை வந்தாலும், காற்று வீசினாலும் அவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சில முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சில முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்படவில்லை. இருப்பினும் மக்களுக்கு உரிய முறையில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கடக்க உள்ள 13வது புயல் இதுவாகும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். கடந்த 121 ஆண்டுகளில் மாமல்லபுரத்துக்கு அருகே புயல் கரையை கடந்தால் இது 13வது முறையாகும். மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 70 கி.மீ. முதல் 80 கி.மீ வரை இருக்கும் என்றார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர்,வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை,திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதே போல் கொடைக்கானல், சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழக, சென்னை பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுள்ளது. அதே கால அட்டவனைப்படி தேர்வுகள் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
