வங்கக் கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயலின் வேகம் இன்று அதிகாலை 4 மணி வரை நீடித்தது. இதனால் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருந்தது.
இதனால் சென்னை மாநகர் முழுவதுமே ‘ஓ வென்ற’ பயங்கர சத்தத்துடன் புயல் காற்று விடிய, விடிய வீசிக்கொண்டே இருந்தது. இப்படி சூறாவளி காற்று குடியிருப்பு பகுதிகளிலும் வேகத்தை காட்டியது. இதனால் பல இடங்களில் வீடுகளின் மொட்டை மாடிகளில் போடப்பட்டிருந்த இரும்பு கூரைகள் காற்றில் பறந்தன. கழிவறைகளில் போடப்பட்டிருந்த மேற்கூரைகளும் சேதம் அடைந்தன.
சென்னை மாநகர் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 24 மரங்களும் சாய்ந்து விழுந்தன. இப்படி 100க்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து அகற்றின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் 3 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் இருவரும் பலியாகி இருக்கிறார்கள். சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 1-வது தெருவில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த லட்சுமி (45), அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் (25) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். துரைப்பாக்கத்தில் ஐ.டி., ஊழியரான விஜயகுமார் என்பவரும் உயிரிழந்தார். தான் பணிபுரிந்து வந்த ஐ.டி., நிறுவனத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த விஜயகுமார் காற்றில் ஆடிக்கொண்டிருந்த 10 அடி உயர ஜன்னலை அடைப்பதற்காக சென்றார். அப்போது ஜன்னல் கண்ணாடி உடைந்து அவரது வயிற்றில் குத்தியது. இரவு நேரம் என்பதால் உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு ஐ.டி. நிறுவனத்தில் ஆள் இல்லாத நிலையில் விஜயகுமார் உயிரிழந்துள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிரஞ்சன்குமார் வயது 22, சுகன்குமார் வயது24. இவர்கள் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைபாக்கம் ஊராட்சியில் தங்கி தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது. பல இடங்களில் மரம் முறிந்து சாலையில் விழுந்தது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கம் அருகே மரம் முறிந்து மின் கம்பி சாலையில் விழுந்து கிடந்தது.
இதை கவனிக்காமல் நிரஞ்சன்குமார், சுகன்குமார் இருவரும் மிதித்து விட்டனர். இதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். இவர்கள் இறந்து கிடந்ததை யாரும் இரவு முழுவதும் பார்க்கவில்லை. காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலும் மேற்கண்ட இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படாததால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.