மாணவி மரண விவகாரம் இ.பி.எஸ்., முதல்வராக இருந்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

சென்னை மாணவி பிரியா மரண விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். அவர் ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவத்தில் என்ன  செய்திருப்பார்? என்பதை அவர் விளக்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நடைபெற்ற விழாவில், ரூ.2.13 கோடி மதிப்பிலான ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய புற நோயாளிகள் பிரிவு கட்டிடம், 7 துணை சுகாதார நிலைய புதிய கட்டிடங்கள் மற்றும் செவிலியர் குடியிருப்பு புதிய கட்டிடங்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இவ்விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் முத்துராஜா, சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் சா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: தமிழகத்திற்கு தற்போது 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்புற சுகாதார நிலையங்கள் கிடைத்துள்ளது. தமிழத்தில் உள்ள 38 மாவட்டங்களில் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் தேவைக்கேற்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் 708 இடங்களில் அமைய உள்ளது. இதில், 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அதில். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மாலையீடு பகுதியில்  ஒரு நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைய உள்ளது. சென்னை மாணவி பிரியா மரணத்தில் தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொண்டுள்ளது. அதன்படி தான் இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு  அனைத்து மருத்துவர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். அவர் ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவத்தில் என்ன செய்திருப்பார்? என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். தற்பொழுது அவர் மருத்துவர்களுக்கு ஆதரவாக பேசுகிறாரா?, மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறு என்கிறாரா?, யார் மீது அவர் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார்?, யார் மீது குற்றம் சாட்டுகிறார்? என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். அறுவை சிகிச்சையில் சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுகுறித்து காவல்துறை முடிவு எடுத்து நடவடிக்கை மேற்கொள்ளும். மதுரை மருத்துவமனையில் சிறுவனுக்கு மாற்றி சிகிச்சை அளித்து விட்டதாக வந்த செய்தி தவறானது. சிறுவனின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சிறுவனின் உடல் நலத்திற்காக அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் அரசு மருத்துவத்தை குறைத்து கூறுவதற்காக நுழைந்திருப்பது வருத்தத்துக்குரிய செயலாக உள்ளது. இதில் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர்கள் வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றி அறுவை சிகிச்சையில் ஈடுபட வேண்டும். அவர்களுக்காக 5,430 கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள 708 இடங்களில் நகர்ப்புற நல வாழ்வு மையம் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. அங்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர், ஒரு உதவியாளர் என நான்கு பேர் பணி அமர்த்தப்படுவார்கள். முதல்வரின் தேர்தல் வாக்குறுதி அடிப்படையிலும் புதுகை எம்.எல்.ஏ., முத்துராஜா கோரிக்கை அடிப்படையிலும் புதுகையில் அமைந்துள்ள டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டியார் பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் வட்டார மருத்துவமனையாக செயல்படுத்த அதற்கான அரசாணை உடனடியாக அறிவிக்கப்படும். இன்னும் ஒரு மாதலத்திற்குள் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். சுகாதாரத் துறையில் புதுகை மாவட்டம் மேம்பட்டு தான் விளங்குகிறது.

தமிழகத்திலேயே புதுகை மாவட்டத்தில் தான் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2,086 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கும் நிலையில் அதில் புதுகை மாவட்டத்தில் மட்டும் 90 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது, கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., சின்னத்துரை கோரிக்கையை ஏற்று கூடுதலான ஆரம்ப சுகாதார நிலையங்களை இம்மாவட்டத்திற்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்வோம். ரூ.46 கோடி மதிப்பில் அறந்தாங்கியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைய உள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 65 = 71