புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம், பூவலூர் கிராமத்தில் மழையினால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களில், அறுவடை நிலையிலிருந்த நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதை, வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாதுரை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அவர் கூறுகையில்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023 பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதியில் பெய்த மழையினால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களில் அறுவடை நிலையிலிருந்த நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாரம், பூவலூர் கிராமத்தில் ஆரோக்கியமேரி மற்றும் ராமு ஆகியோர்களது வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் சம்பா பயிர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
மேலும் சம்பா நெல் அறுவடை நிலையில் உள்ள பயிர்கள் இரண்டு நாட்களில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர் நனைந்த காரணத்தினால் பயிர் சாய்ந்து உள்ளது. இதன்மூலம் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நெல் மணிகளை பாதுகாக்கும் வகையில், பள்ளமான வயல்களில் தேங்கியுள்ள நீரினை வடிகால் அமைத்து வடித்து, நெல் மணிகள் நனைந்து முளைக்காமல் இருக்க, வயலினை காயவிட்டு, அறுவடை பணிகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி ஆகிய வட்டாரங்களில் ஏற்கனவே அறுவடை செய்த நெல் வயல்களில் நெல்லுக்கு பின்பு உளுந்து பயிர் சாகுபடி செய்திட விவசாயிகளிடம் அறிவுரை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறுவகை பயிர், உளுந்து பயிர் சாகுபடி செய்தி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு பின்பு உளுந்து சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் சான்று பெற்ற விதைகள் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே நெல் தரிசில் அறுவடை முடிந்த வயல்களில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றிடவும், மேலும் மண்வளம் காத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாதுரை தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் மா.பெரியசாமி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) மோகன்ராஜ், அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குனர் பத்மப்பிரியா, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், வேளாண்மை அலுவலர்கள் பிரவினா, பாக்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.