மலக்குழியில் இனி ஒருவர்கூட இறங்கக்கூடாது.
திரைக்கலைஞர் ரோகிணி


மலக்குழியில் இனி ஒரு மனிதர்கூட இறங்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார் திரைக்கலைஞர் ரோகிணி.


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விட்டனஸ் திரைப்படம் திரையிடலும், அப்படத்தின் கலைஞர்களுக்கு பாராட்டுவிழாவும் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைக்கலைஞர் ரோகிணி பேசியது:

சாக்கடைகள், குப்பைகளை அகற்றும் சக மனிதர்களை நாம் சாதாரணமாக கடந்து செல்வது இந்த நூற்றாண்டின் அவலம். மலக்கழிக்குள் கூட மனிதர்கள் இறங்குவது இன்னும் நின்றபாடில்லை. இந்த சமூக அவலத்தை விட்னஸ் திரைப்படம் கலைவடிவில் பேசியுள்ளது. இதுபோன்ற கொடுமைக்கு உள்ளாகி இறந்து போகும் துப்புரவு பணியாளர்களின் மரணத்திற்கான நீதியின் குரலை எழுப்பி உள்ளது. குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இப்படத்தின் நோக்கம்.

துப்புரவுப் பணியாளர்களுக்கான பணிபாதுகாப்பு, ஊதியம் வழங்கப்படுவதில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக களையப்படுவது ஒருபுறம் இருக்கட்டும். இனி ஒரு மனிதர் கூட மலக்குழியில் இறங்கக்கூடாது என்பதே முக்கியம். அரசாங்கங்கள் உடனடியாக கழிவுநீர் தொட்டிகளுக்குள் சுத்தம் செய்யும் கருவிகளை தருவிக்க வேண்டும். அதுவே சகமனிதன் மீதான அக்கறையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றார்.

தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, கவிஞர் எஸ்.கவிவர்மன், தமுஎகச மாநில துணைத் தலைவர்கள் நா.முத்துநிலவன், ஆர்.நீலா, கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, எஸ்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன் வரவேற்க, பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =