மறைந்த பூங்குடி ராமசாமி தாத்தா நினைவாக ரத்ததானம் மற்றும் அன்னதான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடியில் 52 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட நபருக்கு அவரது நினைவு நாளில் அக்கிராம மக்கள் மரக்கன்றுகள் நடவு செய்தும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், இரத்ததானம் செய்தும் அவரது நினைவைப் போற்றி நிகழ்வு காண்போரை நெகிழ வைத்தது.

புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடி ராமசாமி என்பவர் 1969ஆம் ஆண்டு மறைந்துள்ளார். அதற்கு முன்பாக அவர் அக்கிராமத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு மக்கள் பணிகளை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரின் நினைவு நாளை ஆண்டுதோறும் அவரது வாரிசுகள் மற்றும் அக்கிராம மக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ராமசாமியின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பொதுமக்களுக்கு 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கியும், பொதுஇடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தும் அவரின் நினைவாக இரத்ததானம் செய்தும் ராமசாமியின் நினைவைப் போற்றும் வகையில் தங்கள் கிராமத்தை அடுத்த கட்ட வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என்ற உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பூங்குடி கிராமத்தில் சமூக சேவகர் முத்துராமலிங்கம் முயற்சியின் கீழ் குருவிக்கூடு அமைப்பின் கிளை திறக்கப்பட்டு இன்று ஒரே நாளில் மட்டும் இருபத்தி மூன்று பேர் இரத்த தானம் செய்தனர்.அப்போது அந்த அமைப்பை சேர்ந்த மேட்டுப்பட்டி செந்தில்,வழக்கறிஞர் ஆத்மநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.இதன் பின்னர் ராமசாமி நினைவாக அக்கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட நபர் 52 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாலும் அவரின் நினைவாக தொடர்ந்து ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடவு செய்து அவர் நினைவை போற்றிவரும் செயல் காண்போருக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.