மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் துபாய் பயணம்

மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்திற்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது முதன் முதலாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அப்போது சிங்கப்பூர் சென்று தற்காலிக சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு முழுமையான சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதனைத்தொடர்ந்து தைராய்டு பிரச்சனை, தொண்டையில் தொற்று மற்றும் சிறுநீரக பிரச்சனை ஆகிய பாதிப்பால் உடல்நிலை மோசமடைந்தது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சென்னையில் 10 நாட்கள், பின்பு சிங்கப்பூர் சிகிச்சை, அமெரிக்கா என பல நாடுகளில் சிகிச்சைகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் 2 வருடங்களுக்கு பின்பு இன்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றார். லண்டனில் உள்ள பிரபல மருத்துவர் அவருக்கு நடைப்பயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக துபாய் வருகிறார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் பரிசோதனைக்கு பின்னர் அவர் துபாயில் இருந்து சிகிச்சை பெறுவதா? அல்லது லண்டன் சென்று பயிற்சி மேற்கொள்வதா? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

துபாய் செல்லும் விஜயகாந்துடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் மற்றும் அவரது உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோரும் துபாய் சென்றனர். மேலும் விஜயகாந்த் உட்பட அவருடன் துபாய் செல்லும் அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்து கொண்ட பின்புதான் விமானநிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.