மரபணு பகுப்பாய்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் உருமாற்றத்தை கண்டறிய 10 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஒரு ஆய்வகம் கூட இல்லை. தற்போது, உருமாறிய கொரோனா வைரசான டெல்டா பிளஸை கண்டறிய மாதிரிகள் பெங்களூரு அல்லது புனே ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் தமிழகத்தில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரசை கண்டறிய ஆய்வகம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வகத்தை இயக்குவதற்காக 6 பேர் கொண்ட குழுவினர் பெங்களூருவில் சிறப்பு பயிற்சியை முடித்து தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் பணிபுரிவதற்காக மேலும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு நேரத்தில் 1,000 மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன் ஆய்வகத்தில் உள்ளது.

அத்துடன் 91 இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு பணி நியமன ஆணையையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதனிடையே இந்தியாவில் வேறு எங்கும் மாநில அரசினால் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.