
மயிலாப்பூரில் செப்.13 அன்று அதிகாலை மளிகைக்கடை ஒன்றில் பூட்டுகளை உடைத்தெறிந்து துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மயிலாப்பூரில் காரணீஸ்வரர் கோயில் தெரு உள்ளது. புகழ்பெற்ற காரணீஸ்வரர் கோயிலையும் கலங்கரை விளக்கத்தையும் இணைக்கும் தெரு ஆள் நடமாட்டம் நிறைந்தது. இந்தத் தெருவின் மையப்பகுதியில் நாகராஜன் என்பவர் முருகன் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இது இரண்டு ஷட்டர் கதவுகளை கொண்ட கடையாகும்.
செப்.13 அன்று அதிகாலை 2.45 மணி அளவில் அந்த கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் துணிகர முயற்சி நடந்ததுள்ளது. பெரிய இரும்பு ராடைக் கொண்டு ஒரு கொள்ளையன் இரண்டு ஷட்டர்களிலும் போடப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்ததாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் ஒரு வெள்ளை நிற வேன் அந்தப் பகுதியை கடந்து சென்றதால் பீதியில் இருந்த அவன் கடைக்கு உட்புறமாகவும் பூட்டு போட்டிருந்ததால் மேற்கொண்டு கொள்ளை முயற்சியில் இறங்காமல் தப்பி ஓடிவிட்டான். இவையெல்லாம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
சம்பவம் தொடர்பாக அந்த கடை உரிமையாளர் தான் அங்கம் வகிக்கும் வணிகர் சங்கம் மூலமாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த தெரு மற்றும் தெரு சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் விசாரணை நடைபெறுகிறது. கொள்ளையன் தனியாக வந்தானா கூட்டாளிகளுடன் வந்தானா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
இதே காரணீஸ்வரர் கோவில் தெருவில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு லேப்டாப்பும் திருடு போனது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்துள்ளது. இதுபோல் தொடரும் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.