மயிலாடுதுறையை பேரிடர் மாவட்டமாக அரசு அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

சீர்காழியில் மழை விட்டு 9 நாட்களாகியும் வடியாத வெள்ளநீர். விவசாயம் முழுவதும் அழிவு, , மயிலாடுதுறையை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை காரணமாக கடந்த 11,12ம் தேதிகளில் தொடர்ந்து பெய்த கன மழையால் தமிழகத்திலேயே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக சுமார் 43 செ.மீ., மழை கொட்டி தீர்த்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மழை நின்று 9 நாட்களாகியும் மழைநீர் வடியாமல் விளைநிலம் முழுவதுமாக தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனால்  சீர்காழி, கொள்ளிடம், கோடங்குடி, உமையாள்பதி, கடவாசல், புதுப்பட்டினம், ஆச்சாள்புரம், வடகால், எடமணல், பழையபாளையம், தாண்டவன்குளம், திருநகரி, தென்னாம்பட்டினம்,ஆலங்காடு உள்ளிட்ட சுமார் 100 கிராமத்தில் விளைநிலம் முற்றிலும் மூழ்கி அழுகியது.

மேலும், பல்வேறு இடங்களில் உப்பனாறு, பொறை வாய்க்கால், புதுமண்ணியாறு, கழுதை வாய்க்கால், ராஜன்வாய்க்கால் உள்ளிட்ட ஆற்றின் கரைகள் உடைந்தும், வழிந்து தண்ணீர் விளைநிலங்களில் புகுந்தது. இதன் காரணமாக சீர்காழி தாலுகாவில் சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வயல் மட்டத்திலிருந்து நான்கு அடி வரை தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் நடவு செய்த சம்பா இளம் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கடந்த பத்தாண்டு ஆட்சி காலத்தில் வடிகால் வசதிகள் தூர்வாராமல் விவசாய நிலங்களில் புகுந்த தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சீர்காழி சுற்றுவட்டாரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

கடந்த அரசை போல் இந்த அரசும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மராமத்து பணிகளை மேற்கொண்டு வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மயிலாடுதுறையை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =