மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம்தேதி தமிழக அரசின் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதையொட்டி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லுாரியில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது :-
தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழக முழுவதும் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 5 ஒன்றியங்களுக்குட்பட்ட 241 ஊராட்சிகள்,4 பேரூராட்சிகள்,2 நகராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். ஊராட்சிமன்ற தலைவர் இம்மாபெரும்கொரோனா தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
தங்கள் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி போடாத மக்களிடம் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துகூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள செய்ய வேண்டும்.கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் அவசர படுக்கை வசதி, குடிநீர்,கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதினால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சமூக வளைதலங்கள் உள்ளிட்டவைகளில் கொரோனா தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்பது போன்ற வதந்திகளை தவிர்த்து, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும். தேவையான அளவு கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது.
பொதுமக்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இம்மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரதாப், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் சரத்சந்தர், மயிலாடுதுறை வட்டாட்சியர் ராகவன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.