மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் புதுச்சேரி மாநில அரசு பேருந்து மயிலாடுதுறையிலிருந்து காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பொறையார் பேருந்து நிலையம் அடுத்து ராஜுவ்புரத்தில் திடீரென்று பேருந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளை வெளியேற்ற, அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

இதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பேருந்து முழுவதும் எரியாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பேருந்து டெப்போ மேலாளரிடம் தீப்பற்றி எரிந்தது குறித்து கேட்டறிந்தார்.

மேலும் பயணிகளை சாமர்த்தியமாக வெளியேற்றிய பேருந்து ஓட்டுனர் மற்றும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.