மனிதாபிமானம் இல்லாத அரசு பஸ் கண்டக்டர்! மாற்றுத்திறனாளி மாணவருக்கு நேர்ந்த கொடுமை புதுகை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

அன்னவாசல் அருகே இரண்டு கண்களும் தெரியாத மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவனை டிக்கெட் எடுக்கவில்லை என்றால் இறக்கி விடுவேன் என கூறி டிக்கெட் எடுக்க வைத்த அரசு பஸ் நடத்துனரின் மனிதாபிமானமற்ற செயல் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்துவதாக உள்ளது. இதற்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகன் முகமதுபாசில்(20). இவருக்கு பிறவியிலேயே இரண்டு கண்களும் தெரியாது. இந்நிலையில் மாணவர் முகமதுபாசில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ., 3ம் ஆண்டு படிக்கிறார். கண்பார்வை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, இலவச பஸ் பாஸ் வைத்திருந்தவர் சில மாதங்களுக்கு முன் பஸ் பாஸ் காணாமல் போனது. புதிய பஸ் பாஸூக்கு விண்ணப்பித்தும் கிடைக்காத நிலையில் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பஸ் பயணம் செய்ய அதிகாரிகள் வலியுறுத்தினர். எனவே, மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைக் காண்பித்து கல்லூரிக்குச் சென்று வருகிறார்.

இந்நிலையில், நாள்தோறும் முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை கல்லூரிக்கு அரசு பஸ்ஸில் சென்று வருவது வழக்கம். இன்று (நவ.16) காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றவர் மீண்டும் மதியம் 1.30 மணியளவில் புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் வழியாக மணப்பாறை சென்ற (டி.என்55.என்.0258 என்ற நம்பர் கொண்ட அரசு பஸ்ஸில் ஏறியுள்ளார். அதன்பின்னர் மாணவர் முகமதுபாசில் பஸ் நடத்துனரிடம் அடையாள அட்டையை காண்பித்து காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்க வேண்டும் என கூறியுள்ளார். அரசு பஸ் நடத்துனர் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பஸ் பாஸ் வேண்டும். இல்லாவிட்டால் டிக்கெட் வாங்க வேண்டும். கீழே இறக்கி விடுவேன் என கறாராக கூறியுள்ளார் இதையடுத்து வேறு வழியில்லாமல் மாணவன் முகமது பாசில் பணம் கொடுத்து டிக்கெட் பெற்று காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்கியுள்ளார்.

நடந்தவற்றை வீட்டுக்கு வந்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுப்பது என்று முடிவு செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகள் துறை ஏற்படுத்தியதுடன் அவர்களுக்கான பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தார். இலவச பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் என்று வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்படுத்தினார். தற்போதும் தி.மு.க., ஆட்சி தான் நடக்கிறது. அவரது மகன் மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக இருக்கிறார்.

தி.மு.க., ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்புகள் செய்யப்பட்ட நிலையில் தற்போது மனிதாபிமானம் இல்லாத பஸ் கண்டக்டரால் அந்த துறைக்கே இழுக்கு ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + = 13