மது அருந்துவோரை ‘குடிகாரன்’ என்று சொல்வதை பொறுத்துக்கொள்ள முடியாது;அமைச்சர் முத்துசாமி

“காலையில் மது அருந்துபவர்களை ‘குடிகாரன்’ என்று யாராவது சொன்னால், அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. காலையில் கடுமையான வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், தவிர்க்க முடியாமல் மது அருந்துகின்றனர்” என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

கோவையில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்யப்படுவதை பொறுத்தவரை, அரசு இன்னும் ஆய்வில்தான் வைத்திருக்கிறது. அது இன்னும் கொண்டு வரப்படவில்லை. 90 மி.லி மது விற்பனையைப் பொறுத்தவரை, எங்களிடம் கருத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள், காலையில் எங்களுக்கு மது அருந்த வேண்டும் என்று கூறுகிறார்கள். தயவுசெய்து நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நான் யாரையும் குறை சொல்வதற்காக கூறவில்லை.

காலையில் மது அருந்துபவர்களை குடிகாரன் என்று யாராவது சொன்னால், அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. மாலையில் அது வேற விசயம். காலையில் கடுமையான வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், தவிர்க்க முடியாமல் மது அருந்துகின்றனர். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமா? வேண்டாமா? அவர்கள் செய்கின்ற வேலைகள் எல்லாம் வேண்டும். வீட்டை விட்டு வெளியே வருகிறோம். சாக்கடை அடைத்திருந்தால், மூக்கைப் பிடித்துக் கொண்டு வீட்டினுள் சென்றுவிடுகிறோம். அதை சுத்தம் செய்வதற்கு யார் வருகிறார்கள்? அப்படிப்பட்டவர்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? எனவே, மாற்று வழி என்ன என்பதை கண்டுபிடிக்கலாம். 90 மி.லி மது விற்பனையை பொறுத்தவரை, இப்படியாக பலர் வருகின்றனர்.

இது தொடர்பாக நாங்கள் கணக்கெடுத்தோம். ஏறத்தாழ நூற்றுக்கு 40% பேர் டாஸ்மாக் கடைக்கு சராசரியாக அரை மணி நேரம் இன்னொருவருக்காக காத்திருக்கின்றனர். ஒருவர் கிடைத்தபிறகு இருவரும் வாங்கி மது அருந்துகின்றனர். அத்தகையவர்களிடம், இரவே வாங்கிச் செல்ல வேண்டியதுதானே, காலையில் அருந்துவதற்கு என்று கேட்டபோது, எங்களால் அது முடியாது. எங்களுடைய குடும்பம் அப்படி. பணக்காரர்கள் மது வாங்கிச் சென்றால், வீட்டில் தனி அறை இருக்கும், அலமாரி இருக்கும். ஆனால், இவர்களைப் போன்றவர்களுக்கு அந்த வசதி கிடையாது. பத்துக்கு பத்து அறைக்குள்தான் அத்தனை குடும்பமும் இருக்கிறது. அவர்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? . எனவே, விளையாட்டாக அல்லது ஒரு ஜாலிக்காக மது அருந்துபவர்களாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் நாம் பேசலாம்.

அதேபோல், 7 மணிக்கே கடையைத் திறக்கப் போகிறார்கள் என்று சொல்கின்றனர். அரசுக்கு அந்த யோசனையே இல்லை. திரும்பத் திரும்ப நாங்கள் கூறுகிறோம். டாஸ்மாக் மூலமாக பெரிய வருமானத்தை ஈட்ட வேண்டும். அதை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை” என்று அவர் கூறினார்.