மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கிய மூத்த வழக்கறிஞர்

மதுரை சிறையில் செயல்படும் நூலகத்திற்கு சுமார் ஆயிரம் புத்தகங்களை மூத்த வழக்கறிஞர் சாமித்துரை வழங்கினார்.

மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் நடந்த விழாவில், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில், சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் ஆகியோர் அவற்றை பெற்றுக்கொண்டனர். பின்னர் பாஸ்கரன் பேசியதாவது, “மதுரை மகத்தான ஊர். இங்குள்ள மத்திய சிறைத்துறை நிர்வாக முயற்சியில் கைதிகளின் மறுவாழ்வுக்கு நூலகம் ஒன்றை தொடங்கியுள்ளனர். நூல்கள் வாங்குவது, பராமரிப்பது என்பது சிரமமான ஒன்று. மத்திய சிறையில் நூலகம் தொடங்கியிருப்பது, சமூகத்தின் மீதான அக்கறையை காட்டுகிறது. சிறைவாசிகளுக்கு நல்வழி காட்டும் நோக்கில் செயல்படும் இந்நூலகத்திற்கு சுமார் ஆயிரம் புத்தகங்களை வழக்கறிஞராக, சமூக ஆர்வலராக சாமித்துரை வழங்குகிறார். இது ஒரு தொடக்கம் என்றாலும், தொடர்ந்து வழங்கவேண்டும். இதன்மூலம் பெரிய நூலகமாக வளரவேண்டும். சமூகத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கும் சிறைவாசிகளுக்கான இது போன்ற திட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக அமையவேண்டும்.” என்றார்.

டிஐஜி பழனி கூறுகையில், ‘‘மதுரை, பாளையங்கோட்டையிலுள்ள சிறைச்சாலைகளுக்கு இந்த புத்தகங்களை வழங்க உள்ளோம். புத்தகங்களை வழங்குவோர் முன்வந்து வழங்கலாம். சிறை நூலகத்திலுள்ள புத்தகங்களை தணிக்கை செய்து, கைதிகளுக்கு வாசிக்க வழங்கப்படும். அவரவர் அறையில் வைத்து படிக்க ஏற்பாடு செய்யப்படும். தேவையான புத்தகங்கள் கிடைக்காதபோது, நிவர்த்தி செய்யும் நோக்கில் கூடுதல் புத்தகங்களை பெறுகிறோம்,’’ என்றார். நிகழ்ச்சியில் டிஐஜி பழனி, கூடுதல் சிறை கண்காணிப் பாளர் வசந்தக்கண்ணன், மூத்த வழக்கறிஞர் சாமித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

83 + = 91