மதுரை கோவை விமான நிலையங்கள் தனியார் மயமாக்க கூடாது:மதுரை விமான நிலையத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்

”திருவனந்தபுரம் விமான நிலையத்தை கேரளா அரசு கையகப்படுத்தியது போன்று மதுரை விமான நிலையத்தையும் தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும்,” என மதுரை, விருதுநகர் எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலோசனை குழுத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., இணை தலைவர் வெங்கடேசன் எம்.பி., துணைத் தலைவர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., விமான நிலைய இயக்குனர் பாபுராஜ் பங்கேற்றனர்.
கூட்டத்தில், எம்.பி., க்கள் கூறியதாவது: விமான நிலைய விரிவாக்கத்திற்கு 626 ஏக்கர் நிலங்கள் தேவை. தற்போது 526 ஏக்கர் நிலங்கள் உள்ளன. 86 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு வழங்க வேண்டும். விரிவாக்கத்திற்கு நிலங்களை வழங்கியவர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டு தொகையான ரூ.250 கோடியில், ரூ.110 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. மீதித்தொகை ஒரு மாதத்தில் வருவாய்த் துறையினரால் கொடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு ஜூலை வரை விமான நிலையத்தை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் விமான நிலையத்தின் வளர்ச்சி மற்றும் வர்த்தக வளர்ச்சி ஒரு பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு தென் மாவட்ட எம்.பி.,க்கள் கோரிக்கை வைக்க உள்ளோம். தற்போது மதுரை விமான நிலையத்தில் 5 டன் பொருட்களை குளிர்விப்பதற்காக கிடங்கு உள்ளது. அதை மேலும் அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டது.திருவனந்தபுரம் விமான நிலையத்தை கேரளா அரசு கையகப்படுத்தியது போன்று மதுரை விமான நிலையத்தையும் தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும். மதுரை, கோவை விமான நிலையம் தனியார் மயமாக்கும் பட்டியலில் இருப்பது வருத்தம் அளிக்கிறது, என்றனர்.