மதுரை : கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக என்.ஐ.டி தொழில்நுட்ப நிபுணர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும் – அமைச்சர் ஏ.வ.வேலு

மதுரையில் கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக என்.ஐ.டி தொழில்நுட்ப நிபுணர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தியுள்ளதாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் புதுநத்தம் சாலையில் நாராயணபுரம் அருகில் கட்டுமான பணியின் போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவிக்கையில்:- மதுரை மாவட்டத்தில் நகர பகுதியிலிருந்து நத்தம் சாலையினை இணைக்கின்ற வகையில் ரூ.545 கோடி மதிப்பில் 7.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. தற்போது 5.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் நிறைவடைந்துள்ளன.

மும்பையை சார்ந்த ஜே.எம்.சி என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் இப்பணியினை கடந்த மூன்றாண்டுகாளக மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாலம் கட்டும் பணியானது முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அடுக்கு சாலை பகுதியில் தான் விபத்து ஏற்பட்டிருக்கின்றது. இந்த விபத்து தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கின்றது.

பாலம் இணைப்பு பணியின் போது ஹெரிடரை இணைக்கும் போது ஹைட்ராலிக் ஜாக்கி இயந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. 160 டன் ஹெரிடரை தூக்கி நிறுத்த 200 டன் ஹைட்ராலிக் ஜாக்கி பயன்படுத்துவதற்கு பதிலாக குறைந்த டன் அளவுள்ள ஹைட்ராலிக் ஜாக்கியை பயன்படுத்தியுள்ளனர். பாதுகாப்பற்ற நிலையில் பணிகளை மேற்கொண்டதன் காரணமாக இவ்விபத்து நடைபெற்றுள்ளது.

மேற்படி பணியில் தரக்கட்டுப்பாட்டு வகைகளை மேற்கொள்ள யோக்மா ஸ்டர்லைட் என்ற நிறுவனம் மேற்பார்வை செய்து வருகிறது. இப்பாலம் கட்டும் பணியானது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறுகிற பணியல்ல. முழுக்க முழுக்க மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சார்பில் நடைபெறும் பணியாகும்.

நேற்றைய தினம் விபத்து ஏற்பட்ட உடன் உடனடியாக தமிழக அரசின் சார்பாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சரும் மற்றும் மாவட்ட கலெக்டரும் விபத்து பகுதியினை பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வரின் உத்தரவின்படி இன்று நானும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சரும் பார்வையிட்டோம். பணி நடைபெற்ற இடத்தில் பொறியாளர் இருப்பதற்கு பதிலாக தொழிலாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர். ஹைட்ராலிக் ஜாக்கியின் தன்மை குறித்து விசாரனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். என்.ஐ.டி தொழில்நுட்ப நிபுணர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக தரக் கட்டுப்பாட்டுப் பிரிவின் மூலம் விருதுநகர், சிவகங்கை மற்றும் திருச்சி உள்ளிட்ட 25 இடங்களில் ஆய்வு செய்யபட்டு, 8 இடங்களில் அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்றது என்று கண்டறியப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்தினை தடுக்க பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.