மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 3 ஆண்டுக்குள் முடிவடையுமா? – மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் எதிர்பார்ப்பு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 3 ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்ப்பதாக மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்திருந்த மனுவில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற்றிருப்பார்கள்.

ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பல வருடங்களாகியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை.  ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வழக்கினை தீர்ப்பிற்காக இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்த, நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறுகையில், “தமிழகத்தோடு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடியும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பணிகள் அவ்வளவு துரிதமாக நடைபெற்றதாக தெரியவில்லை. மனுதாரர் ஒவ்வொரு நகர்வுக்கும் நீதிமன்றத்தை நாடியே உத்தரவு பெற்றுள்ளார். ஆகவே நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திராமல், எய்ம்ஸ் பணிகளை துரிதப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற 36 மாதங்களுக்குள்ளாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது” எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.