மதுரையில் ரூ.69 லட்சம் மதிப்பில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் – 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு

மதுரையில் வாகன சோதனையில் ரூ.69 லட்சம் மதிப்பில் பழைய 1000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், மக்கள் அனைவரும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு பழைய ரூ.500, 1000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லை.

இந்நிலையில், இன்று காலை மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு கார்களில் வந்த 8 பேர் வங்கிக்கு பணம் செலுத்தப் போவதாக கூறிய நிலையில், போலீசார் அந்த இரு கார்களையும் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது செல்லாத பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

அதனடிப்படையில் இரு கார்களிலும் வந்த முத்துமோகன், ராம்குமார், காவேரி, கருப்பன், சிவன், விஜயகுமார், உதயகுமார், அரவிந்தகுமார் ஆகிய 8 நபர்களையும் கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் அவர்களிடமிருந்து ரூ.69,39,500 மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டுகளையும், அவர்கள் பயன்படுத்திய இருகார்களையும் பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என மதுரையைச் சேர்ந்த ஒரு கும்பல் பல நபர்களுக்கு ஆசைவார்த்தை கூறி பணத்தை பறித்துவிட்டு தப்பி செல்வது தொடர்கதையாக இருந்த நிலையில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 1 =