
மதச்சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் நாட்டுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அடியெடித்து வைக்கும்போது டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும் முஸ்லிம்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சொந்த மாநிலம் திரும்பினர்.
இதையடுத்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஒருசேர கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தப்லீக் ஜமாத் மாநாடுதான் முக்கிய காரணம் என செய்திகள் வெளியாகின. இணையதளத்தில் இதுகுறித்து கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிடப்பட்டன. அப்போது ஒரு பிரிவினருக்கு எதிராக மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டது. அப்போது பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். கொரோனா வகுப்புவாத முத்திரை குத்தப்பட்டது.
இந்நிலையில் நிஜாமுதீன் மர்கஸ் விவகாரம் மதவாதம் ஆக்கப்படுவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்றும் ஜமிஅத் உலேமா ஏ ஹிந்த் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறுகையில் ‘‘பிரச்சனை என்னவென்றால், மீடியாக்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவு செய்திகள் நாட்டில் எல்லாவற்றையுமே வகுப்புவாத கண்ணோட்டத்துடன் காண்பிக்கின்றன. யூடியூப் சேனல்கள் செய்தி இணையதளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடப்படுகின்றன. அதிகாரம் மிக்கவர்களின் கருத்துக்களை மட்டுமே இணையதளம் எதிரொலிப்பதாகவும், எந்தவித பொறுப்பும் இன்றி எதை வேண்டுமானாலும் பதிவிட்டு வருவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நீதிபதிகள், நிறுவனங்களுக்கு எதிராக எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் எழுதுகின்றன. வலிமையானவர்களை பற்றியே அக்கறை கொள்கின்றன. பொதுமக்கள், நீதிபதிகள், நிறுவனங்கள் குறித்து அக்கறை கொள்வதில்லை. இதுதான் நம்முடைய அனுபவம்.
மதச்சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் நாட்டுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும். இதுபோன்ற யூடியூப் சேனல்களை முறைப்படுத்த ஒன்றிய அரசு ஏதேனும் முயற்சித்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அரசு இவை புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கையாளப்படும் என தெரிவித்துள்ளது.