பொங்கல் பானை தயாரிக்க மண் கிடைக்கததால் தொழில் பெரும் பாதிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதியில் பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணிக்கு போதிய மண் கிடைக்காததால் அத்தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களில் பொங்கல் பண்டிகை தான், தமிழ் கலாச்சாரத்தின் வெளிபாடாகவும் உழைப்பின் மேன்மையை உணர்த்தும் உன்னத திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் கம்ப்யூட்டர் மையமாகி போன இக்காலத்திலும் மண்பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இன்றும் நடைமுறையில் உள்ளது. இதனால், பொங்கல் வந்தால் மண்பானைகளுக்கான தேவை அதிகரித்து விடும்.

புதுக்கோட்டை மாவட்டம், மழையூர், கொசலக்குடி, துவரடிமனை, நெடுவாசல், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, ஆலங்குடி அருகே மழையூர் பகுதியில் தயாரிக்கப்படும் மண்பானைகள் கலை நுணுக்கத்துடன் தயார் செய்யப்படுவதால் இவை தமிழக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பானைகள் தவிர மண்ணால் செய்யப்படும் தண்ணீர் தொட்டிகள், அடுப்புகள், சட்டிகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கு வந்து, மண்பாண்டங்களை வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து மழையூரை சோ்ந்த  மண்பாண்ட தொழிலாளி சக்திவேல் கூறியதாவது: நாங்கள் மண்பாண்டங்கள் செய்வதை எங்கள் குலத்தொழிலாக செய்து வருகிறோம். இது மிக பயப்பக்தியுடன் செய்ய வேண்டிய தொழிலாகும். மாறி வரும் நவீன உலகில் மண்பாண்டங்களுக்கான தேவை அதிகம் இல்லை, இருப்பினும் பழமை மாறாத கலாச்சாரம் மிக்க தமிழர்கள் இன்னும் மண்பாண்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமூக அந்தஸ்து இல்லை என்பதாலும் போதிய வருமானம் இல்லாததாலும் இளைய தலைமுறையினர் இத்தொழிலில் ஆர்வம் காட்டுவது இல்லை.

மழையூர் பகுதிகளில் 50 குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மண்பாண்டங்கள் செய்வதற்கு பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே அதற்கான மண்ணை சேகரிக்க தொடங்கி விடுவோம். தற்போது போதிய மழை இல்லாததால் வழக்கமாக எடுக்கும் குளங்களில் மண் எடுக்க முடியவில்லை. இதனால் மாட்டு வண்டிகளில் 10 கி.மீ சென்று மண் எடுத்து வருகிறோம். அதுவும் போதிய அளவு கிடைப்பதில்லை. இதனால், மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு எங்களுக்கு மண்பாண்டம் பொருட்கள் தயாரித்து சேகரித்து வைக்க ஒரு கூடம், வங்கி கடன் வசதி, மாதம் தோறும் உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். மண்பானைகள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மண்பானையில் சமையல் ருசியாக இருக்கும் அதேவேளையில் ஆரோக்கியமானது. தற்போது, நாங்கள் தயாரிக்கும் பெரிய பானை ரூ 100-க்கும், சிறிய பானை, சட்டி, கலயம் ரூ50-க்கும், அடுப்பு ரூ150 விற்பனை செய்கின்றோம் பலர் இங்கு வந்து வாங்கி செல்வதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 74 = 84