மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சவடுமண் கொள்ளையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் யூனியன் மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.மடம் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு குளத்தில் ஊராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தூர்வாரும் பணியானது ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் என்பவரின் அண்ணன் சுப்பிரமணியன் என்பவருக்கு வழங்கப்பட்டு உள்ள நிலையில், அவர் அங்கு உள்ள சவுடு மணலை அப்பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் செய்யும் நபர்களுக்கு உடந்தையாக இருந்து கீழயேந்தல், செய்யானம், அவுலியா நகர், மீமிசல் போன்ற பகுதிகளில் லாரி, டிப்பர் மற்றும் டிராக்டர் மூலம் கடத்தி பல இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார் என அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் இதுசம்பந்தமாக அங்கு உள்ளவர்கள் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தும் எந்த ஒரு பலனும் இல்லை என்றும், கடந்த 2 நாட்களாக பட்டப்பகலில் சவுடு மண் கொள்ளை நடந்து கொண்டு இருக்கின்றது என்றும், இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.