மடத்துக்குளம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு- கலப்படம் செய்த 2500 கிலோ வெல்லம் பறிமுதல்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் திருப்பூர்மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிரஞ்சீவி, பாலமுருகன், விஜயகுமார் மற்றும் ரகுநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மடத்துக்குளம் வட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ஆலைகளில் தயாரித்து விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்ததில் கலப்படம் என சந்தேகிக்கப்பட்ட 2500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அதிலிருந்து 2 வெல்லம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் வெல்லம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 4700 கிலோ (அஸ்கா) சர்க்கரை மற்றும் வெல்லத்தை பிளீச்சிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். மாறாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக வேதிப்பொருட்களான சோடியம் பை சல்பேட், கால்சியம் கார்பனேட், சல்பர் டை ஆக்சைடு, சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

வெல்லம் தயாரிக்க அஸ்கா பயன்படுத்தக்கூடாது என வெல்லம் தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது, வெல்லம் உற்பத்தியாளர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்றிருக்க வேண்டும் . அரசு உத்தரவின்படி வெல்லம் தயாரிக்கும் இடங்களில் சிசிடிவி. கேமரா பொருத்தி இருக்க வேண்டும். வெல்லம் தயாரிப்பில் விதிமீறல் இருப்பது தெரியவந்தால், உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை பாயும். பொதுமக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும் வெல்லத்தை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும், வியாபாரிகள் தரமற்ற வெல்லத்தை வாங்கி விற்கக்கூடாது, இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 2