மசோதாக்களை தாமதப்படுத்தி அரசுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் – தமிழக ஆளுநர் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாக்களை தாமதப்படுத்தி பிறகு அரசுக்கு திருப்பி அனுப்பிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிருத்தி தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று தெரிவித்தது. எதுவும் செய்யாமல் கோப்புகளைக் கிடப்பில் போட முடியாது என்றும் கருத்து தெரிவித்தது.

இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கடந்த 18ம் தேதி கூட்டப்பட்டு முதல்வர் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அந்த மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பி இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததன் மூலம் அரசை ஆளுநர் முடக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்றமே கவலை தெரிவித்த பிறகும் ஆளுநர் ஆர்.என். ரவி, மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறாரா என கேள்வி எழுப்பி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

முன்னதாக, கேரள அரசும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக இதுபோன்ற வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, ஆளுநர் தாமதப்படுத்துவதற்கான காரணம் குறித்து கேரள ஆளுநரின் செயலர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.