மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: தமிழக -கேரள எல்லையில் போலீசார் தீவிர சோதனை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று அந்த மாநில போலீசார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். குறிப்பாக, மாநில எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கர்நாடகா குக்கர் குண்டு வெடிப்பு மக்களிடம அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலை ஐய்யப்பன் கோவில் சீசன் தொடங்கி உள்ள நிலையில், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு தமிழகம் வழியாக செல்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்தளவே பக்தர்கள் வந்தனர். இதனால் நடைதிறந்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் அதிகமானோர் சபரிமலை வந்திருந்தனர்.

தற்போது குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து குமுளி மற்றும் கம்பம் மெட்டு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பையா, ராமசந்திரன் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஐய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? சந்தேகத்திற்கிடமான நபர்கள் உள்ளனரா? என தமிழக – கேரள எல்லையில் பல்வேறு குழுக்களாக போலீஸார் பிரிந்து ஆங்காங்கே தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 14 =