‘‘மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதோடு, மருந்து, மாத்திரைகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதனை தவிர்க்கும் நோக்கிலும், நோயாளிகளின் நலன் கருதியும் ‘‘மக்களை தேடி மருத்துவம்” என்னும் திட்டம் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின்படி, சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று, அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவர்.
இந்நிலையில் ‘‘மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில், முதல்வர் முக.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார்.
அதன்படி, சாமனப்பள்ளி கிராமத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரோஜாவின் இல்லத்திற்கே நேரடியாக சென்று திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, மருந்துகளை முதல்வர் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரின் இல்லத்திற்கு சென்று மருந்து மாத்திரைகளையும், மூக்கனூரை சேர்ந்த கால்கள் இழந்த இருவருக்கு செயற்கைக் கால்களையும் வழங்கினார்.
மேலும் சூளகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸ் வசதியையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.