மகளிர் உரிமைத் திட்டம் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன். இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி – மாநகராட்சிப் பணியாளர்கள், தமிழ்நாடு தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்.

களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.