
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏழைகள் தவிர்க்கப்படவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை பொறுத்தவரை உண்மையான தேவை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் விடுபட்டுவிடக்கூடாது என முதல்-அமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். இதுவே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
எனவே உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி இருந்து, அவர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தால், அவர்களுக்காக குறைதீர்க்கும் முகாமை அமைக்கவேண்டும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்காக வட்ட அளவில் குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெற தகுதி இருப்பவர்கள் ஏதேனும் காரணத்திற்காக விடுபட்டு இருந்தால், இந்த உதவி மையத்தை அணுகலாம். இந்த உதவி மையத்தின் தொலைபேசி எண்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்டவர்கள் மூலமாக தெரிவிக்கபடும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏழைகள் தவிர்க்கப்படவில்லை. யார் யாருக்கு தேவைப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.