
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டமாக இருக்கும் என எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கீகரிக்கும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இது குறித்து பாராட்டு தெரிவித்து ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, பெண்களுக்கு சொத்தில் சமபங்கு, வேலைவாய்ப்பு உரிமைகள், திருமண உதவித் திட்டம் ஆரம்பப்பள்ளியில் பெண்கள், பெண்களுக்கான விடியல் பயணம், புதுமைப் பெண், பெண்களுக்கு உள்ளாட்சியில் இடஒதுக்கீடு மற்றும் பெண்கள் உயர்கல்வியைத் தொடர மாதம் ரூபாய் ஆயிரம் என பெண்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மகளிருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்க இன்று தொடங்கப்பட்டுள்ளது. சமூகநீதி வரலாற்றில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் புரிந்து வரும் அரசு மேலும் ஒரு சாதனையை செய்திருக்கிறது. இந்தத் திட்டம் என்பது இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டமாக இருக்கும். உழைக்கும் மகளிருக்கு அங்கீகாரம் அளிக்கும் உன்னத திட்டமாகும். திட்டத்தை தொடங்கி வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள். பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.