மகளிர் அதிர்ச்சி : மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் கடந்த மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

திட்டத்திற்காக மொத்தம் 1.57 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில் அவர்களில் 1.06 கோடி பேர் தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் 15-ம் தேதி உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து 7 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் இருக்கும் சூழலில் இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் என்பதால் இந்தத் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கால், உரிமைத் திட்டத்தால் பயன்பெறும் மகளிர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.