போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க 3 மாதத்தில் புதிய அமைப்பை அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க 3 மாதத்தில் புதிய அமைப்பை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், நீதிபதி வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:- போலி பத்திரிகையாளர்களை களைய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 மாதங்களில் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு பிரஸ் கவுன்சிலுக்கு மட்டும் வழங்க அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு அமைக்கப்படும் அமைப்பானது மட்டுமே, பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

இலவச வீட்டுமனை பட்டா, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகளை தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் தற்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.