
நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் எளிமையான முறையில் விழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி,சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெய கணபதி கோயிலில் வி.கே.சசிகலா விநாயகரை மலர்தூவி வழிபட்டார்.போயஸ் கார்டனில் உள்ள ஜெய கணபதி ஆலயத்தில் விநாயகருக்கு தீப ஆராதனை நடத்தப்பட்டது. அப்போது சசிகலா விநாயகருக்கு மலர் தூவி வழிபட்டார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் போயஸ் கார்டன் இல்லம் அருகே, சுமார் 90ஆண்டுகள் பழமையான ஆலமர லிங்கத்தை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஜெய விநாயகர் கோயிலுக்கு வந்து வழிபட்டார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும், மக்கள் ஆங்காங்கே கோயிலுக்கு வெளியில் இருந்தும், வீடுகளில் இருந்தவாறும் எளிமையாக முறையில் வழிபட்டு வருகினற்னர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குருணி விநாயகருக்கு 18 படி அரிசியில் மெகா கொழுக்கட்டை படைத்து வழிப்பாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இன்றி கோவில் பட்டர்கள், ஊழியர்களை வைத்து இந்நிகழ்சி நடைபெற்றது.கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை , வெல்லம், தேங்காய், கடலை, எள்ளு, ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயார் செய்து விநாயகருக்கு படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அபிஷேகம் மற்றும் நெய்வேத்தியம் ஆராதனைகள் நடைபெற்றது.
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும், பொதுமக்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை தனி நபராக எடுத்துச் சென்று அருகிலுள்ள ஆலயங்களில் வைத்து செல்லலாம் என்றும் இங்கு வைக்கப்படும் சிலைகளை முறையாக கரைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.