பொற்பனைக்கோட்டை அகழாய்வைத் தொடர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழனின் பொக்கிசமாகத் திகழும் பொற்பனைக்கோட்டை அகழாய்வைத் தொய்வின்றித் தொடர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை இன்று பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக தமிழனின் வரலாறும் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆதிச்சநல்லூர், அரிகக்மேடு போன்ற அகழாய்வைத் தொடர்ந்து தற்பொழுது கீழடி முக்கிய சான்றாகத் திகழ்கிறது.

சித்தன்னவாசல், குடுமியான்மலை, கலசமங்கலம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான தொல்லியல் நினைவுச் சின்னங்கள் உள்ளன. தற்பொழுது பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் சங்ககாலத்து பொருட்கள் கிடைத்து வருவது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழனின் பொக்கிசமாகத் திகழும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் மூலம் பேராசிரியர் இனியன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

சிறிய அளவிலான நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் இந்த அகழாய்வு தொய்வின்றித் தொடர மத்திய, மாநில அரசுகள் முன்முயற்சி எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து சட்டமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வர்.

கொடநாடு சம்பவத்தில் ஏராளமான மர்ம முடிச்சுகள் உள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த வீட்டில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திக்கிறது. அதிமுக ஆட்சியில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. இந்தப் பின்னணியில் முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே யார் தவறு செய்திருகிறார்கள் என்பது தெரிய வரும்.

தனி அலுவார்களின் பதவி காலம் நிறைவடையும் நிலையில் மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் சிறிய கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் அரசு உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக வரலாற்றில், அதன் வளர்ச்சியில் மிக முக்கியமான அங்கமாக திகழ்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர். அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதில் தவறு ஏதும் இல்லை.

இக்கட்டான நிதி நெருக்கடிகளுக்கு மத்தில் கடந்த 110 நாட்களில் தமிழக அரசு பல்வேறு நிலைகளில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை வழங்குவது, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்சனைகளையும் அரசு தீர்த்து வைக்க வேண்டும் என குறிப்பிட்டார். பேட்டியின்போது மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 48 = 57

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: