பொறுப்பு ஏற்றதில் இருந்து தற்போது வரை போராடிக்கொண்டிருக்கிறேன்- எடப்பாடி பழனிச்சாமி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜ் இல்ல திருமண விழாவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த பின் அவர் பேசியதாவது:- எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க. கோட்டையாக விளங்கியது. அதன்பிறகு ஜெயலலிதா காலத்தில் திண்டுக்கல் மாவட்டம் எஃகு கோட்டையாக உருவெடுத்தது. இந்த இருபெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. வலிமையான இயக்கமா வளர்ந்து இருக்கிறது. எத்தனையோ சோதனைகளை கடந்துதான் நாம் ஆட்சி செய்தோம். அது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். நான் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆட்சியில் இருந்தபோதும் போராட்டம்தான் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் போராட்டம்தான். அத்தனை போராட்டங்களையும் தாண்டி வெற்றியை பெற்றிருக்கிறோம்.

அ.தி.மு.க.வை பிளவு படுத்த பலர் காத்து கிடக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. அ.தி.மு.க.வை யாராலும் பிளவு படுத்த முடியாது. ஏனென்றால் இது மக்கள் சக்தி இயக்கம். எம்.ஜி.ஆர். மக்களுக்காக இந்த கட்சியை உருவாக்கினார். ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் இந்த கட்சியை கட்டிக்காத்தார். அந்த தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. மக்களே வாரிசாக இருந்தனர். அவர்களின் வழியில் இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெற தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினோம். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிந்து திடடங்களை செயல்படுத்தினோம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு தி.மு.க. மூடுவிழா நடத்தி வருகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் விற்பனை போன்றவை தினந்தோறும் நடந்து வருகிறது. சர்வாதிகார ஆட்சியை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். திறமையற்ற இந்த அரசை விரைவில் அகற்ற மக்கள் நல்ல பதிலை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 56 = 61